"கூட்டணி குறித்து பேசாதீர்" - கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை உத்தரவு
கூட்டணி வியூகங்கள் குறித்து கட்சித் தலைமை மட்டுமே முடிவெடுக்கும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரிலோ தெரிவிக்க வேண்டாம் என கட்சியினரை வலியுறுத்தியுள்ளனர்.
தனி நபர்களின் விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கட்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அத்தகைய செயலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளுமாறு கட்சியினருக்கு ஓ.பி.எஸ்., இபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments